Monday, April 27, 2015

கடவுள் 3 : மனிதனும் கடவுளும்.

சிவன் , ஏசு, அல்லா , புத்தர் இவர்கள் கடவுளாக அறியபட்டதன் காரணம் அவர்கள் ஆற்றலாக மாறி இருக்க வேண்டும்.

மனிதன் தான் உடலாகிய நிறையை ஆற்றலாக மாற்றி கடவுளாகிறான். எந்த ஆற்றலாக என்றால். - பிரபஞ்ச ஆற்றலாக.

ஆற்றலில் பல வடிவம் உள்ளது, நிலை ஆற்றல் ,இயக்க ஆற்றல், வேதி ஆற்றல், வெப்ப ஆற்றல் , ஒளி , ஒலி ,எண்ணம் என்று எல்லாமே ஆற்றல் தான்.

மனிதன் பிரபஞ்ச ஆற்றலாக மாறி கடவுளுடன் கலந்தால் அவனும் கடவுளே. அதைத்தான் முக்தி அல்லது மோக்ஷம் என்பார்கள்.

ஒரே வரியில் சொன்னால் முக்தி அடைந்த மனிதன்தான் கடவுள்.

முக்தி அடைவதற்குதான் சமயங்கள்  பல தொழில் நுட்பங்களை கூறுகின்றன.

ஒவ்வொரு மனிதனும் கடவுளிடம் (பிரபஞ்ச ஆற்றல்) இருந்து தான் உடலுக்கு தேவையான ஆற்றலை நேரடியாகவோ மறைமுகமாகவோ எடுத்து கொள்கிறான்.

தூக்கம் , தியானம் மூலமாக நேரடியாகவும்.

ஆகாரத்தின் மூலமாக மறைமுகமாகவும் பிரபஞ்ச ஆற்றலை மனிதன் எடுத்து கொள்கிறான்.

பிரபஞ்ச ஆற்றல்தான் அணுக்களுக்கு ஆற்றலை கொடுத்து, சூரியனில் அந்த ஆற்றலை வெளிபடுத்த வைத்து அதன் மூலம், தாவரங்களுக்கும், விலங்குகக்குளும், மனிதனுக்கும் மறைமுகமா கிடைக்க பெறுகிறது.

தூக்கத்தின் மூலமாகவும் தியானத்தின் மூலமாகவும் நேரடியாகவே மனிதனால் பிரபஞ்ச ஆற்றலை பெற முடியும். எப்படி?

பிரபஞ்ச ஆற்றல் என்பது குறைந்த அலைவரிசையில் மறைந்து இருக்கும் அளவிலடங்கா ஆற்றல். அதை பெறுவதற்கு நீங்களும் உங்கள் எண்ண அலைவரிசையை குறைக்க வேண்டும்.

FM ஐ சரியான அலைவரிசைக்கு tune செய்து இசையை கேட்பது போல.

FM radio தான் உங்கள் உடல். பிரபஞ்ச ஆற்றல்தான் இசை. மனதில் தோன்றும் எண்ணம் தான் அதன் அலைவரிசையை கட்டுபடுத்தும். ஒரே எண்ணம் மட்டும் மனதில் இருக்கும் போது அதன் அலைவரிசை குறைக்க படுகிறது.

தூங்கும் போது மனதில் எண்ணஓட்டம் குறைந்து தானாகவே பிரபஞ்ச ஆற்றல் நம் உடலில் பாய்கிறது. ஆனால் நாம் தூங்க ஆரம்பித்து நம் பிரபஞ்ச அலைவரிசையும் மன அலைவரிசையும் ஓன்று சேர சிறிது நேரம் எடுக்கும்.

உதாரணத்திற்கு நாம் 9 மணிக்கு தூங்கினால் இரண்டு அலைவரிசையும் ஒன்றாக 3-4 மணி நேரம் எடுக்கலாம். இது நாம் தூங்கும் போது மனதின் எண்ணங்களை பொறுத்து மாறும்.

நான் எப்போதாவது தீவிரமாக ஒரு விஷயத்தை பற்றி யோசனை செய்து கொண்டு தூங்கினால் விடியற்காலை 3-4 மணிக்கு விழித்து விடுவேன். என் வாழ்வில் பல முறை அனுபவித்த உணர்வு இது. விரைவில் பிரபஞ்ச அலைவரிசைக்கு மனஅலைவரிசை tune ஆகுவதே இதற்கு காரணம்.

நீங்களும் இதை முயற்சி செய்து பார்க்கலாம். எண்ணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், எண்ணத்தின் தீவிரமே முக்கியம். எண்ணம் தீவிரமாக இருக்கும் போது அலைவரிசை குறையும்.

உடல் போதுமான அளவு ஆற்றலை பெற்று விட்டால் அதற்குமேல் தூக்கத்தில் இராது, விழித்து விடும்.

அதிககளைப்புடன் தூங்கினால் அதிக நேரம் தூங்குவதும் இதனால்தான். உடல் போதுமான அளவு ஆற்றல் பெற அதிகநேரம்எடுத்து கொள்கிறது.

தூக்கமும், தியானமும் ஒன்றுதான் , வித்தியாசம் என்னவென்றால் தூக்கத்தில் நம் சுயநினைவில்லாமல் பிரபஞ்ச ஆற்றலை பெறுகிறோம். தியானத்தில் சுயநினைவுடன், அவ்வளவுதான்.

நாம்விரும்பிய நேரத்தில் பிரபஞ்ச ஆற்றலை எடுத்து கொள்ளும் கலை தெரிந்து இருந்தால் , நமக்கு உணவே தேவை இல்லை.

Saturday, April 25, 2015

கடவுள் 2: யார் கடவுள்?

இத்தனை ஆண்டுகள் கடவுள் யார் என்று நான் யோசித்து எடுத்த முடிவு, (தவறாகவும் இருக்கலாம்...).

கடவுளின் அடிப்படை பண்புகள்:
1. ஆக்கமும் அழிவும் இல்லாமல் இருத்தல்.
2. எங்கும் இருத்தல்.

மேற்கூறிய இரு பண்புகளும் கொண்ட இரண்டு விஷயங்கள் இருக்கிறது.
1. அண்டம் (பிரபஞ்சம்).
2. ஆற்றல்.

அண்டம் -  உலகத்தின் எல்லா பொருட்களும் இதனுள் அடங்கும், எங்கும் இருக்கிறது.
இதுவரை யாரும் அதன் ஆதியையும் அந்தத்தையும் அறியவுமில்லை.
என்னை பொறுத்த அளவில் அதற்கு ஆக்கமும் இல்லை அழிவும் இல்லை.
விஞ்ஞானிகள் அண்டத்தின் ஆக்கமாக கூறும் "பெரு வெடி" கொள்கை, மொத்த அண்டத்திற்கு பொருந்தாது என நினைக்கிறன், "பெரு வெடி" கொள்கை படி உருவானது அண்டத்தின் ஒரு பகுதிதான்.

ஆற்றல் - ஆக்கமும் அழிவும் இல்லை, ஆனால் எல்லா இடத்திலும் இருக்கிறதா என்பது ஆராயத்தக்கது.

வேதாத்ரியம் கூறுவது - இப்பிரபஞ்சத்தின் ஆற்றல் சூழ்ந்து அழுத்துவது ஆகும்.வெற்றிடம்அல்லா எல்லா பொருட்களையும் அது சூழ்ந்து எல்லா திசைகளில் இருந்தும் அழுத்துகிறது.


வெற்றிடத்தின் ஊடே அது பரவுகிறது. அப்படியென்றால் ஆற்றல் இல்லாத இடம் பருப்பொருள் என்று நினைத்தால் அதுவும் தவறு.

ஏன்?
ஐன்ஸ்டீனின் புகழ் பெற்ற சமன்பாடான E = MC2 , என்ன சொல்கிறது என்று பார்ப்போமேயானால் , ஆற்றலும், நிறையும் ( பொருளும் ), வேறல்ல இரண்டும் ஒன்றுதான். நிறை ஆற்றலின் இன்னொரு வடிவம், ஆற்றல் நிறையின் இன்னொரு வடிவம்.  நீரும், பனிக்கட்டியையும் போன்று.

நீர் என்பது ஆற்றல் என்றால் பனிக்கட்டி என்பது நிறை.

இந்த பிரபஞ்சமே ஆற்றல் தான். அந்த ஆற்றல் தான் கடவுள். எல்லா உயிருள்ள உயிரற்ற பொருட்களும் நிறை வடிவத்தில் இருக்கும் ஆற்றல். ஆக எல்லாமே கடவுள்.

சரி அப்படியென்றால் இந்த சிவன், ஏசு , அல்லா , புத்தர் , இவர்களெல்லாம் யார். ஏன் இவர்கள் கடவுள் என்று அறிய பட்டார்கள்.



Friday, April 24, 2015

கடவுள் 1: அதுவா? அவரா?


எங்கு தேடினாலும் யாரை கேட்டாலும், இது தான் கடவுள் என்று உறுதியான விடை எதுவும் கிடைத்தபாடில்லை. மிக சிறு வயதில் எனக்கு தெரிந்த கடவுள் சிவன், பிரம்மா, விஷ்ணு இவர்கள்தான். கொஞ்சம் காலம் சென்ற பிறகு ஏசு, அல்லா, புத்தர் என்று இன்னும் சில கடவுள்கள். இன்னும் கொஞ்ச காலம் சென்ற பிறகு உலகின் பல்வேறு இனங்கள், நாகரிகங்கள் எத்தனையோ கடவுள்களை அறிமுகம் செய்தன. இவர்களில் யார் கடவுள் என்று குழம்பி கொண்டிருக்க, சில பேர் இவர்கள் யாரும் கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்று நாத்திகம் பேசினர்.
கடவுள் இருக்கிறார் என்பவர்களுக்கும், இல்லை என்பவர்களுக்கும் பொதுவாக ஒன்றை சொல்ல ஆசைபடுகிறேன். எதோ ஒரு நாத்திகர் சொன்னார் கடவுள் இல்லை என்று, அதனால் கடவுள் இல்லை, எதோ ஒரு சாமியார் சொன்னார் கடவுள் இருக்கிறார் என்று, அதனால் கடவுள் இருக்கிறார். என்று முடிவுக்கு வந்தால் மனிதனின் தனி சிறப்பான பகுத்தறிவில் இருந்து நீங்கள் விலகியே நிற்கிறீர்கள். கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்று “நீங்கள்” ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள் அதுதான் “பகுத்தறிவு”.
கட்டுரையின் தலைப்பை “யார் கடவுள்?” என்றா, இல்லை “எது கடவுள்?” என்று வைப்பதா என்று குழம்பி போய்விட்டேன். ஏனெனில் இவ்வளவு குழப்பத்தில் கடவுளுக்கு உயிர் இருக்கிறதா, இல்லையா என்று முதலில் ஆராய வேண்டும் ஏனெனில் அதுதான் “யார்” அல்லது “எது”. என்பதை முடிவு செய்யும். உயிர் இருந்தால் யார் கடவுள் இல்லையேல் எது கடவுள் என்று முடிவு செய்யலாம்.
சரி உயிர் இருக்கிறதா இல்லையா என முடிவு செய்வதென்ன என்று யோசித்து பார்த்தால். “அசைவு” என்று விடை கிடைக்கும். அசைவில்லையேல் நமக்கு உயிர் இல்லை என்று முடிவு செய்யப்படும். நம் நாட்டில் வாழ்ந்த சில சித்தர்கள் உயிருடன் இருக்கும் போதே உடல் அசைவை நிறுத்தி இருக்கிறார்கள். அவர்கள் இறந்து போய்விட்டனர் என்று நம் மக்கள் அவர்களை எரித்து விட்டனர் என்று கேள்வி பட்டிருக்கிறேன்.
மனிதன் உட்பட பல மிருகங்கள் அதிகமாக இயங்குவதால் அவைகளுக்கு உயிர் உண்டென்பதை உணர்கிறோம். தாவரங்கள் மெதுவாக இயங்குவதால் பல நேரங்களில் அவைகளும் உயிர்கள்தாம் என்பதை மறந்து விடுகிறோம். உலோகங்களும், அலோகங்களும் தனிச்சையாக இயங்காததால் அவைகள் உயிரற்றவை என்கிறோம்.
மின் விசிறி அசைவை வைத்து அதற்கு உயிர் உள்ளது என முடிவுக்கு வரலாமா? இல்லை. அவை switch போட்டால் தான் அசைகிறது எனலாம். ஆனால் மனிதர்களும் அப்படிதானே தேவை ஏற்படும் போதுதானே அசைகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக உலோகத்திலும் சரி அலோகத்திலும் சரி, நீங்கள் அணு அளவுக்கு சென்று சிந்தித்தால் எலக்ட்ரான்கள் தன்னிச்சையாக தானே அசைந்து கொண்டிருகின்றன.
ஜகதீஷ் சந்திர போஸ், இந்தியாவின் புகழ் பெற்ற விஞ்ஞானி. அவருடைய நண்பர் ஒருவருக்கு உயிர் பற்றி சில சோதனைகளை செய்து காட்டியிருக்கிறார். அவர் நண்பரின் வார்த்தைகளிலேயே இங்கே நான் சொல்கிறேன். நண்பர் கூறுகிறார்......
என்னை அவருடைய அமைதியான ஆய்வு கூடத்திற்கு அழைத்து சென்றார்.
“நான் இந்த பெரணி செடியுடன் தாவர உருப்பெருக்கியை இணைக்கிறேன். அதன் பெரிதாக்கும் தன்மை பிரம்மாண்டமானது. ஒரு நத்தை ஊர்வது இதன் முன் பெரிது படுத்தப்படுமானால் அது ஒரு துரித ரயில் வண்டி போவது போல் தோற்றமளிக்கும்.” என்றார் போஸ்.
என் பார்வை ஆவலுடன் அந்த பெரணி திரையில் தெரிவதை நோக்கியது. நுட்பமான உயிர் சலனங்கள் இப்போது நன்கு தென்பட்டன. அந்த செடி வசீகரிக்க பட்ட என் கண் முன்னால் மெதுவாக வளரலாயிற்று. அந்த விஞ்ஞானி ஒரு உலோக துண்டால் பெரணியின் ஒரு முனையை தொட்டார். ஊமை நாடகம் போன்று விரிவடைந்த அந்த செடியின் அசைவு திடீரென நின்றது. அந்த தண்டை அகற்றியவுடன் அதன் சலனம் சுறுசுறுப்பாக தொடங்கியது.
அந்த மகா விஞ்ஞானி இன்னும் ஒரு கருவியை காண்பித்தார்.
“நான் உங்களுக்கு ஒரு தகரத் துண்டில் சில பரிசோதனைகள் செய்து காண்பிக்கிறேன். உலோகங்களில் உள்ள உயிர் சக்தி வெளி தூண்டல்களுக்கு சாதகமாகவோ, பாதகமாகவோ இயங்குகின்றன. மை அடையாளங்கள் இவற்றின் பலவித எதிர் செயல்களை எடுத்து காட்டும்” என்றார் போஸ்.
நான் மிகுந்த ஈடுபாட்டுடன் அணு அமைப்பின் தனித்தன்மை பொருந்திய அலைகளை பதிவு செய்யும் வரைபடத்தை கவனித்தேன். போஸ் மயக்க மருந்தை தகரத்தின் மீது தடவியதும் அலையதிர்வுகளின் பதிவு நின்று விட்டது. அந்த உலோகம் மெதுவாக சுய நிலையை அடைந்ததும் அதிர்வுகள் மறுபடியும் பதியலாயின. இப்போது அதன் மீது நச்சு பொருள் ஒன்று தடவப்பட்டது. உடனே அத்தகர துண்டு துடித்தது அவ்வரை படத்தின் ஊசி திடீரென மரண அறிக்கையை அறிவித்தது.
போஸ் கூறினார்... “கத்தரிகோல், இயந்திரங்கள் போன்றவற்றில் இருக்கும் உலோகங்கள் களைப்படையக்கூடும். சில காலம் அவற்றிற்கு ஓய்வளித்தால் அவை நன்கு செயல் படுகின்றன என்பதை போஸ் கருவிகள் நிரூபித்து காட்டியுள்ளன” என்று முடித்தார்.
.
.
உலகத்தில் உயிரற்ற பொருள்கள் எதுவுமே இல்லை...
கடவுள் இருக்கிறாரா, இல்லையா... நான் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.. ஒருவேளை இருந்தால், யாரா? எதுவா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.